அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்!
காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம்.
சீனப் பழமொழி ஒன்று... முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல... குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்! (அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா...)
ஆனால், முத்தம் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு...?
டென்ஷனாக வேண்டாம். கேள்விக்குக் காரணம் உண்டு!
ஏதோ வம்படிக்கு இழுத்துப் பிடித்து பசக் என்று கொடுப்பது... கச முசா என்று அவசரமாக திணித்துத் தொலைவது... எசகு பிசகாக குதறி வைப்பது... லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இதெல்லாம் முத்தமில்லீங்கோ...!
கமல்ஹாசனோ, இம்ரன் ஹஸ்மியோ கதாநாயகிக்கு சட்டென்று இச்சொன்று தருவார்களே... அது போல் செய்வது பெரிய கம்ப (அல்லது, காம) சூத்திரெமல்லாம் இல்லீங்க... ரொம்ப சிம்பிள். இதற்கு கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள், பத்து. இந்த பத்து கட்டளைகளை பின்பற்றி கிஸ் அடித்துப் பாருங்கள். அப்புறம், உங்கள் காதல் அல்லது கல்யாண வாழ்க்கையில் எல்லா நாளும் பவுர்ணமி தான்!
முதல் கட்டளை:
சத்தான முத்தத்துக்கு முதல் எதிரி... வேற என்னங்க... "தாத் கி பத்பூ" என்று தூர்தர்ஷன் காலத்தில் இருந்து சொல்வார்களே, அந்த வாய் துர்நாற்றம் தான். பேசினால் பூ வாசம் புறப்பட வேண்டாம். குறைந்த பட்சம் குமட்டிக் கொண்டு வரக் கூடாது.
ஓவராக 'தம்'மடித்தல், புகையிலைப் பொருட்கள், உடல் நலக் கோளாறு, கண்டதைத் திண்பது என்று ஏகப்பட்ட காரணங்களால் வாய் நாற்றம் ஏற்படுகிறது.
காதலியோ, காதலனோ, மனைவியோ இது பற்றி பளீரென்று வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், துர்நாற்றத்துடன் தரப்படும் முத்தத்தில் அத்தனை சுவாரஸ்யமோ, காதலோ இருக்காது டியர்... அதோடு, அடுத்த முறை முத்தம் தர முற்பட்டால் பார்ட்னர் அதிர்ச்சி அடையக் கூடாது தானே...?
எனவே, முத்தம் கொடுக்க மூஞ்சியை நீட்டும் முன் கொஞ்சம் வாய் கொப்பளித்துக் கொள்ளுங்கள். பிரஷ் போட்டு பல் துலக்கி விட்டுப் போனால் இன்னும் நலம். (நெருங்கி வருவாய்... நெருங்கி வருவாய்... என்ற க்ளோசப் டூத் பேஸ்ட் விளம்பரத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்)
கட்டளை இரண்டு:
முத்தம் கொடுக்கும் போது இதழ்களை குவிப்பது மட்டுமல்ல... வாயை திறப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது.
உணர்வு பூர்வமாக முத்தம் கொடுக்க வழியே இல்லாமல் வாயை மூடிக்கொள்ளக் கூடாது. அதேசமயம், எதிரே இருப்பவரை விழுங்கிவிடும் அளவுக்கு அகககககலமாகவும் வாயை திறக்கக் கூடாது.
உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் லிப்-டு-லிப் ஆரம்பித்து, பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் சுவை கூடும்.
மூன்றாம் கட்டளை:
நானும் கொடுக்கிறேன் பேர்வழி என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து, ரப்-அன்ட்-டப்பாக இருந்தால், வெறும் சத்தம் தான் வரும். முத்தமாக இருக்காது!
உங்கள் பார்ட்னர் எப்படி கொடுத்தால் ரசிக்கிறார், எந்த மூவ்மென்டை ருசிக்கிறார், என்ன செய்தால் பிடிக்கிறது என்பதை உணர்ந்து கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்தும் போது தான், நீங்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைய முடியும். எனவே, முத்தத்தில் ஒருவித தாளகதி வேண்டும். இருவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
கட்டளை நான்கு:
சொல்லித் தருவதில்லை மன்மதக் கலை என்பதெல்லாம் உண்மை தான். அதற்காக, முத்தம் கொடுப்பதெல்லாம் கூடவே பிறந்த கலையாகி விடுமா என்ன? கற்றுக்கொள்ளுங்கள்.
யாருக்கும் எடுத்த உடனேயே உணர்வுபூர்வமாக முத்தம் கொடுக்க வந்துவிடாது. அதற்கும் ஒரு சின்ன டிப்ஸ் உண்டு. கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்... காப்பி அடியுங்கள்... உங்களவர் என்ன செய்கிறார் என்பதை கவனியுங்கள். அதையே நீங்களும் செய்தால் போதும். கொஞ்ச நாளிலேயே கிஸ் அடிப்பதில் எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம்.
ஐந்தாம் கட்டளை:
முத்தம் கொடுக்கையில், கைகள் என்ன செய்கின்றன என்பது முக்கியமாக அம்சம்.
ஏதோ முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே தப்பி ஓடிவிடப் போகிறார் என்பதைப் போல தலை முடியையோ, இடுப்பையோ அழுந்தப் பிடித்துக் கொள்ளக்கூடாது. முத்தம் என்பது அன்பைத் தரும் களம். வலி ஏற்படக்கூடாது. கைகளை கண்ட இடத்தில் வைக்கவும் கூடாது. அதிலும் ஒரு அழகுணர்ச்சி தேவை.
உங்கள் பார்ட்னரின் கைகள், முதுகு, பின்புறம், கழுத்து, இடுப்பு போன்றவற்றின் மீது மெல்ல ஊர்ந்து செல்லலாம்.
கவனம்... உணர்ச்சி வசப்பட்டு காயம் ஏற்படும் அளவுக்கு கிள்ளி வைத்தால் அவ்வளவு தான்.
கட்டளை ஆறு:
முத்தத்தில் நாக்கின் பங்கு ரொம்ப முக்கியமானது. மெல்ல ஊடுருவி, உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும். ஒரு ஓவியனின் தூரிகை போல நளினமாக நடமாட வேண்டும். ஆனால், அதற்கும் அளவு உண்டு. உள் நாக்கை கவ்விப் பிடிப்பது போலவோ, பல்துலக்கும் போது வாயின் நாலாபுறத்திலும் சுழன்றடிப்பது போலவோ செய்யக்கூடாது.
நாக்கின் நுனி மட்டுமே மாய வித்தைகளை செய்ய வேண்டும். நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், எவ்வளவு பொறுமையாக, மென்மையாக நடந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகும் உற்சாகம்.
ஏழாம் கட்டளை:
முத்தங்கள் சிந்தும் போது எச்சில் அமிர்தமாகும் தான். அதற்காக, நாய் குட்டி போல் முகமெல்லாம் சளக்... சளக் என்று எச்சிலாக்கி வைக்கக்கூடாது. அது எரிச்சல் ஏற்படுத்தும்.
கட்டளை எட்டு:
முத்தம் மட்டுமே இரண்டு தனி நபர்களை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இணைக்கிறது. இந்த இணைப்பு தான், ஆழமான, திருப்திகரமான உறவுக்கு வழிகோலுகிறது. எனவே, ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும் படுக்கையை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அழகுணர்ச்சி வெளிப்பட வேண்டும். அன்பு மழை பொழிய வேண்டும்.
இது கொஞ்சம் சிரமம் தான். ஆனால், அதற்கும் தற்காப்பு வழி உண்டு.(இதுக்கெல்லாமா? என்று கேட்கக்கூடாது.)
முத்தத்துக்கு வாய் நீளம் தான் முக்கியம். கை நீளத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். எக்குத் தப்பான இடத்தில் சேட்டை செய்வதை (அட்லீஸ்ட் நாகரீகம் கருதியாவது) தவிர்க்கலாம்.
அதேசமயம், நீங்கள் இரண்டு பேருமே அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில், நோ லிமிட்ஸ்...
ஒன்பதாம் கட்டளை:
முத்தமிடும் போது, கண்களை பப்பரப்பே என்று திறந்து வைத்துக் கொண்டு திரு திருவென விழித்தபடி பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. ரோட்டில் செல்லும் போது தான் கண்களை அகல திறந்து வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியின் பாதையில் கண்கள் மூடியிருந்தால் தான் வழி எளிதாகத் தெரியும்.
அதற்காக, என்ன நடந்தாலும் கண்களை திறக்க மாட்டேன் பேர்வழி என்று இறுக்கி மூடிக்கொண்டு இருந்தாலும் கண்றாவியாக இருக்கும். அவ்வப்போது கண் மலர்ந்து, உங்கள் பார்ட்னரின் மலர் முகத்தை பார்த்தால் மனது மலரும். (எப்புடி...?)
கட்டளை பத்து:
கான்பிடன்ஸ் கண்ணா... கான்பிடன்ஸ்.... அது ரொம்ப முக்கியம்.
முத்தத்தை யார் தொடங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. தருபவர், பெறுபவர் இருவருமே முழு மனதோடு, உறுதியோடு, நம்பிக்கையோடு முத்தமிட வேண்டும்.
இது எதற்கென்றால், பத்து அல்ல பத்தாயிரம் டிப்ஸ் கொடுத்தால் கூட, முத்தத்தின் உச்சத்தில் எதுவுமே நினைவில் இருக்காது. எனவே, முத்தமிடும் போது தன்னம்பிக்கையுடன் அணுகவும்.
ஆக... இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால், இந்த நாள் மாத்திரமல்ல... வாழ்க்கையின் எந்த நாளிலும் முத்தம் சத்தாக இருக்கும். மகிழ்ச்சியின் வித்தாக இருக்கும்.
ஒரு விஷயத்தை சொன்னால் மறந்து விடக்கூடும். காட்டினால் ஓரளவு நினைவில் இருக்கும். ஆனால், செய்து பார்த்தால் மனதில் எப்போதும் பளிச்சென்று தங்கி விடும். இதன் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்...
"போதும்... போதும்... எந்த ஆணியும் புடுங்கத் தேவையில்லை. நாங்களே..." என்று யாரும் கிளம்பும் முன் ஒன்றை இறுதியாக சொல்லி நிறைவு செய்கிறேன்...
வேற என்னங்க... ஹேப்பி கிஸ்ஸஸ்!
No comments:
Post a Comment