home

உடல் எடை குறைய


மிக பெரிய பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தை தருவது குழந்தை பிறந்தப்பின் அம்மாக்களுக்கு ஏற்படும் உடல் பருமன். குழந்தை பேறு என்பது ஒரு தாய்க்கு அடுத்த பிறவி என்பார்கள். குழந்தை பேற்றால் நம் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முதலில் இருப்பது நம் உடலின் எடை. மிக சிலர் மட்டுமே எப்போதும் போல் இருப்பார்கள், அதற்கு குடும்பவழி காரணமாக இருக்கலாம். ஆனால் 99% பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் :-

1. இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள்

2. குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்துக்கொள்வதில்லை

3. குழந்தைக்காக நன்றாக சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது.

4. அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது.


அடிவயிற்று சதையை மட்டும் குறைக்க (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்) வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயற்சிகளை குறிப்பிடுகின்றேன். இதை செய்யவதற்கு முன்


1. உடற்பயற்சி செய்யும் போது, மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் நிறுத்திவிடவேண்டும்.

2. வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாது. திட உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டால் குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

3. உடற்பயிற்சி முடிந்தவுடன் சாப்பாடு சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

4. தண்ணீர் நிறைய குடிக்கலாம், அதுவும் சுடத்தண்ணீராக இருந்தால் நலம்.

5. பயிற்சியின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும், நமக்கு வேகமாக குறைக்க வேண்டும் என்று, கடுமையாக செய்யக்கூடாது.

கீழ்கண்ட படத்தில் இருப்பது போன்று படிப்படியாக செய்து பாருங்கள்.



1. தரையில் விரிப்பு ஏதாவது போட்டு நேராக படுத்துக்கொள்ளுங்கள்

2. இடது காலை மட்டும் மெதுவாக மேலே தூக்குங்கள். முடிந்தவரை தூக்கிவிட்டு இறக்கிவிடுங்கள்.

3. அடுத்து வலது காலை மெதுவாக மேலே தூக்குங்கள். மெதுவாக இறக்கிவிடுங்கள்.

இதை வேகமாக செய்யக்கூடாது, மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அப்போது தான் தசைகளுக்கு நல்லது.

இதில் படம் 2, 3 ல் காட்டியுள்ள உடற்பயிற்சிகளை மட்டும், முதலில் ஒரு 5 முறை மேலே தூக்கி இறக்குமாறு எண்ணிக்கை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்து மொத்தம் 10 முறை. இதனை குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். 5 என்ற எண்ணிக்கை 10 ஆக்கி கொள்ளலாம். உங்களால் நன்றாக சுலபமாக வலியில்லாமல் கால்களை தூக்கி இறக்க முடிந்தவுடன், படம் 4 ஐ முயற்சி செய்யுங்கள்.

4. இரண்டு கால்களையும் ஒரு சேர மெதுவாக தூக்கி, ஒரு சேர மெதுவாக இறக்குங்கள். இப்படி தினமும் உங்களால் முடிந்த அளவு விடாமல் செய்து வந்தால் அடிவயிற்று சதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டிப்பாக குறையும்

5. எப்போது உடற்பயற்சி செய்தாலும் கடைசியில் ஒரு நிமிட அளவு உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்களை மூடி அப்படியே படுத்து இருந்துவிட்டு எழுந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக படம் 6 இல் காட்டி இருப்பது போல் எப்போது எல்லாம் தரையில் உட்காருகிறீர்களோ அப்போது எல்லாம் கால்களை குத்திட்டு, கைகளால் இறுக்கி உடம்போடு அழுத்தி உட்காருங்கள். இதை டிவி பார்க்கும் போது செய்யலாம். உட்காரும் போது எல்லாம் இப்படி உட்கார்ந்து பழக்கப் படித்துக்கொண்டால், அடிவயிற்று சதை குறையும். இதை தனியாக உடற்பயிற்சியாகவும் செய்யலாம். ஆனால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் முடியும் போது எல்லாம் செய்யுங்கள்.

நாம் உட்காரும் போது சோபா, சேர் என்று உட்காராமல், தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம், அதுவுமே ஒரு உடற்பயற்சி தான்.

இப்படி உடற்பயிற்சிகள் எல்லாம் என் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் நான் ஆரம்பித்தேன். அதுவரையில் எனக்கு அதன் தேவை இல்லாமல் இருந்தது, அதற்கு பிறகு நடைபயிற்சி. இது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 -3 கிமி நடந்து செல்லுவேன். பள்ளிக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல நடந்தே சென்று வருவேன். இரண்டு சக்கர வாகனம் இருந்தாலுமே உபயோகப்படுத்தாமல் இருந்தேன். நடப்பதினால் என் உடல் பருமன் ஏறாமல் இருந்தது.

வீட்டில் டிரட் மில் இருந்தால், குறைந்த பட்சம் 10 நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை உடலுக்கு தேவையான பயிற்சியையும், உங்களை எப்போதும் Active ஆக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment